
கோலாலம்பூர், 13 நவ.- மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்பிஆர்எம்) நடத்திய சிறப்பு நடவடிக்கையில், வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டபூர்வமாக்கும் திட்டத்தில் (Program Rekalibrasi Tenaga Kerja – RTK) இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அரசாங்க அமலாக்க முகமை அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரியும் அடங்குவர்.
எஸ்பிஆர்எம் தெரிவித்ததாவது, இவர்கள் சிலர் வெளிநாட்டு தொழிலாளர்கள் பெயரில் சட்டப்பூர்வ ஆவணங்களை எளிதாக பெறுவதற்காக முகவர்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
“ஆப்ஸ் பிளீச்” என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி, ரி.மி.116,000-க்கும் மேற்பட்ட பணம், மொபைல் போன்கள், வங்கி புத்தகங்கள், தங்க நகைகள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
வயது 30 முதல் 50 வரை உள்ள இவர்கள் அனைவரும் லெம்பா கிளாங் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால், மேலும் சிலர் இதில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது, அரசு வெளிநாட்டு தொழிலாளர்கள் திட்டத்தை முறையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுத்த உறுதியாக இருக்கிறது. இந்தக் கைது நடவடிக்கைகள் ஊழல் ஒழிப்பில் நாட்டின் உறுதியை வெளிப்படுத்துகிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மக்களும் இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை கண்டால் உடனடியாக தகவல் அளிக்க வேண்டுமென எஸ்பிஆர்எம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-யாழினி வீரா



