
கோலாலம்பூர், 3 பிப்ரவரி — முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூச விழா பிப்ரவரி 11ஆம் தேதி உலகளாவிய அளவில் கொண்டாடப்பட உள்ளது. மலேசியாவில், பத்துமலை முருகன் கோவில் உலகப் புகழ்பெற்ற பக்தித் தலமாக இருந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் நேரில் வந்து வணங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் பெருமளவில் கூடுவது பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் அதிகமாக இருக்கும். தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த வரும் பக்தர்கள், வழக்கம்போல் பத்துமலை கோவில் அருகிலுள்ள சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்துவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில PPP தலைவர் டாக்டர் சுரேந்திரன், இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் வாகனங்களுக்கு சம்மன் வழங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் பக்தர்களும் அவர்களது வாகனங்களை ஒழுங்காக நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், பக்தர்களுக்கு உதவுவதே முக்கியம், அதற்குப் பதிலாக அபராதம் விதிப்பது சரியான தீர்வாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை அமைதியாக நிறைவேற்றி, எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாமல் வீடு திரும்பும் வாய்ப்பினை போலீசார் ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
முந்தைய ஆண்டுகளில், கோவில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இது பக்தர்களுக்கு அதிருப்தியும் சிரமமும் ஏற்படுத்தியது. இதை மறுபடியும் நிகழாமல் இருக்க, பிப்ரவரி 10, 11 ஆகிய இரண்டு நாட்களுக்காக போலீசார் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என டாக்டர் சுரேந்திரன் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு செய்தால், பக்தர்கள் முருகப்பெருமானை ஆன்மிக அன்புடன் வழிபட்டு, தங்களது நேர்த்திக்கடன்களை அமைதியாக நிறைவேற்றும் ஒரு சிறப்பான சூழல் உருவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்