
சுபாங் ஜயா, ஏப்ரல் 4: புத்ரா ஹைட்ஸில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடிப்பு மற்றும் தீ விபத்துக்கான ஆரம்ப தொழில்நுட்ப அறிக்கை இரண்டு வாரங்களில் தயாராகும் என செலாங்கோர் மாநில காவல் துறை தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார்.
வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதி இயற்கை அமைப்பை மாற்றியதால் நிலம் நிலைதடுமாறியுள்ளது என்றும், அந்த பகுதியை நிலைத்தன்மையாக்கும் பணிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிக்கப்படும் பின்னரே தொழில்நுட்ப குழுவினர் தடயங்களைத் தேட இயலும் என்றும் அவர் கூறினார்.
இந்த தொழில்நுட்ப விசாரணை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சட்டம், தேசிய பேரழிவுகள் மேலாண்மை முகமை (NADMA) ஆணை நம்பர் 1 இன் கீழ் நடைபெறுகிறது. வெடிப்பால் சுமார் 8 மீட்டர் ஆழமும் 70 மீட்டர் அகலமும் கொண்ட குழி ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தரவுகள் படி, எரிவாயு, காற்று மற்றும் தீப்பற்றும் மூலக்கூறு ஆகிய மூன்றும் சேரும் போது தான் வெடிப்பு ஏற்படக்கூடும். வெறும் வாயுகசிவு மட்டுமே இருந்தால் வெடிப்பு நிகழாது எனவும், இது தொடர்பாக மேலும் விரிவான விசாரணை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
பேட்ரோனாஸ் நிறுவனம் கட்டிய எரிவாயு குழாய் 1991ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும், வழக்கமான பராமரிப்பு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோன்று சபா, சரவாக் மாநிலங்களில் நிலநடுக்கங்களால் வாயுகுழாய்களில் கசிவுகள் நிகழ்ந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
-யாழினி வீரா