
கோலாலம்பூர், 26 ஜனவரி — மலேசியா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவுகள் வெறும் வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளைத் தாண்டி, கலாச்சார மற்றும் நாகரிக புரிதலையும் மரியாதையையும் உள்ளடக்கி உள்ளன என்று மலேசிய பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
2025 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசுகையில், “சி ஜின் பிங்குடன் நான் மேற்கொண்ட கலந்துரையாடல் நினைவில் உள்ளது. பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்துவதோடு, அமைதியை பாதுகாக்கவும், நம்பிக்கை அடிப்படையிலான நட்பை வளர்க்கவும் கவனம் செலுத்தினோம்,” என்று அவர் கூறினார்.
சனிக்கிழமை இரவு கோலாலம்பூரில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு மற்றும் சீன பண்பாட்டு சுற்றுலா அமைச்சு இணைந்து நடத்திய விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.
சீனாவில் வசந்த கால விழா என அழைக்கப்படும் இந்த புத்தாண்டு கொண்டாட்டம், மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகத்தின் ஒற்றுமைக்கான மிகச் சிறந்த உதாரணமாக இருப்பதாக பிரதமர் பாராட்டினார்.
இரு நாடுகளின் உறவுகள் வர்த்தகத்தின் மையமாக மட்டுமின்றி, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் பரிமாற்றத்தின் வழியாக பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பை மேம்படுத்துவதன் மூலமும் வலுப்பெற வேண்டும் என அவர் கூறினார்.
இந்த நிகழ்வு, சீன மற்றும் மலேசிய கலாச்சாரங்களின் ஐக்கியத்தை முன்னிறுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் உறுதியாக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.
-வீரா இளங்கோவன்