
பினாங்கு, 2 செப்டம்பர் 2025 – பினாங்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) இன்று, ஊழல் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து போலீஸ் அதிகாரிகளை, அதில் ஒரு மூத்த அதிகாரியையும் கைது செய்துள்ளது. மொத்தமாக RM9,000 வரை லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது, 20 முதல் 40 வயதுக்குட்பட்ட ஐவர், இன்று பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை, SPRM பினாங்கு அலுவலகத்தில் சாட்சி அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டனர். ஆரம்ப விசாரணையில், அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை, செபராங் பிறை பகுதியில் நடந்த சோதனை நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் வைத்திருந்த குற்றச்சாட்டை கவனிக்காமல் விடுவதற்காக பணம் கோரியதும், பெற்றதும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவரே நேரடியாக ஒரு மோட்டார் சைக்கிள் வேலைப்பாடாளர் மைய உரிமையாளரிடம் இருந்து பணத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, SPRM பினாங்கு இயக்குநர் டத்தோ எஸ். கருணாநிதி, கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார். மேலும், வழக்கு ஊழல் தடுப்பு சட்டம் 2009 இன் பிரிவு 17(a)க்கு உட்பட்டு விசாரணை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட போலீசார் அனைவரும் 24 மணி நேரம் SPRM காவலில் வைக்கப்பட்ட பின்னர், ஏஜென்சியின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
-யாழினி வீரா



