
பாத்து 9 செராஸ், காஜாங் பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு அருகே பூனைகளை மூட்டைகளில் அடைத்து, வாகனத்தில் எடுத்துச் செல்லும் சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் போலீசுக்கு கிடைத்துள்ளது.
காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யூசுப் கூறியதாவது:
“சம்பவத்துக்கு தொடர்புடைய வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, நேற்று மற்றும் இன்று தனித்தனியாக இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்டன. வீடியோவில் சில ஆடவர்கள் பூனைகளை பிடித்து மூட்டைகளில் அடைத்து, ஒரு வாகனத்தில் கொண்டு செல்லும் காட்சிகள் உள்ளன. இது அடையாளம் தெரியாத இடத்தில் பூனைகளை கைவிடுவதற்காக செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு வாசிக்குழுவின் உறுப்பினர்கள், வீடியோவில் காணப்பட்டதாகத் தெரிய வந்துள்ளதுடன், அவர்கள் பூனைகளை சித்திரவதைச் செய்ததை மறுத்துள்ளனர்,” என்றார்.
மேலும், கால்நடை மருத்துவ சேவைத்துறையும் இதுகுறித்து புகார்களை பெற்றுள்ளதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு 2015ஆம் ஆண்டின் விலங்குகள் நலச் சட்டம் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நாஸ்ரோன் தெரிவித்தார்.