
கோலாலம்பூர், 14 ஏப்ரல்: முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவி இன்று 85 வயதில் தேசிய இருதய மருத்துவமணியில் (IJN) மாலை 7.10 மணிக்கு காலமானார். அவரது மறைவுக்கு அரசுத் தலைமை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமரின் துறை வெளியிட்ட அறிக்கையின்படி, உடல் நாளை காலை 8 மணிக்கு தேசிய பள்ளிவாசலுக்கு கொண்டு வரப்படும். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேசியப் பள்ளிவாசலின் முதன்மை பிரார்த்தனை மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலி நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, பகல் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா தொழுகை நடைபெற்று, தேசிய பள்ளிவாசலில் மாவீரர்கள் கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படும்.
ஆண் முஸ்லிம்கள் கறுப்பு பாஜு கெபாங்க்சான், கறுப்பு சாம்பிங் மற்றும் கறுப்பு சோங்கொக் அணிய வேண்டியது அவசியம். முஸ்லிமல்லாத ஆண்கள் டார்க் லவுஞ் சூட் அணிய வேண்டும். பெண்கள் கறுப்பு உடைகளுடன் வெள்ளை துகில் அல்லது ஷாலுடன் வரவேண்டும்.
தேசிய பள்ளிவாசல் சுற்றி இரண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்திற்குள் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பியில் ஏற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-வீரா இளங்கோவன்