
கோலாலம்பூர், 6 ஏப்ரல்: கோவில்கள் தொடர்பான நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில், மலேசிய இந்து சங்கம் பிரதமர் துறையை நோக்கி ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளது. பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கனிடம், இந்த கோரிக்கையை கொண்ட மனுவை சமீபத்தில் சங்கத்தின் தலைவர் தங்க கணேசன் ஒப்படைத்தார்.

இந்த புதிய அமைப்பு, நாட்டில் உள்ள 2,500க்கும் மேற்பட்ட இந்து கோவில்களை ஒழுங்குபடுத்தவும், அவற்றின் பதிவு, நில உரிமை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுவதற்காக உருவாக்கப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, நில உரிமை சிக்கலால் 1,500 ஆலயங்கள் அரசு பதிவில் சேர இயலாமல் உள்ளன என்றாலும், அவை மலேசிய இந்து சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கோவில்களின் நிர்வாகத்தினை மேம்படுத்தும் வகையில், ஒரு டிஜிட்டல் பதிவு முறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதில் வருடாந்த நிதி அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இது முழுமையான நல மேலாண்மையை உறுதி செய்யும் என தங்க கணேசன் தெரிவித்தார்.
-வீரா இளங்கோவன்