
கோலாலம்பூர், ஜனவரி-12, சுங்கை புலோ நாடாளுமன்றத் தொகுதியில் வசிக்கும் 4,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொங்கல் திருவிழா முன்னிட்டு பொங்கல் பொருட்கள் இன்று (ஜனவரி 12) வழங்கப்பட்டது.
சுங்கை புலோ நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ சிரி ரமணன் ராமகிருஷ்ணன், செமரக் காசி பொங்கல் (மகிழ்ச்சி பொங்கல்) திட்டத்தின் கீழ், தனது தொகுதியில் வசிக்கும் B40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த உதவியை அளித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. “இந்த செவ்வாய்க்கிழமை, மலேசியாவின் இந்திய மக்கள் தை மாதத்தை வரவேற்கிறார்கள், இது புதியதொரு தொடக்கத்தை குறிக்கிறது. அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழா அனைவருக்கும் வளமும் மகிழ்ச்சியையும் தரட்டும்,” என அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி, சுங்கை புலோ மக்கள் நலச் சங்கம் மற்றும் கம்யூனிட்டி தலைவர்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டது. தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சராகவும் உள்ள ரமணன், இந்த திருவிழா மலேசியா முழுவதும் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்கும் நல்ல வாய்ப்பாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். “நம்பிக்கையுடன் கொண்டாடுங்கள். மக்களுக்கிடையே ஒருமித்த உணர்வு மிக முக்கியமானது,” என்றும் மலேசியா மதானி நோக்கத்தின் கீழ், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒற்றுமையை மேம்படுத்த வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டார்.