
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான வழக்கை விசாரித்து வந்த சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா கே. ரவி, திடீரென சிறப்பு புலனாய்வு குழுவிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில், திமுக ஆதரவாளரான ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, சென்னை ஐகோர்ட் பல உத்தரவுகளை பிறப்பித்தது. இதையடுத்து, சென்னை அண்ணாநகர் துணை ஆணையர், ஆவடி துணை ஆணையர் மற்றும் சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்த சைபர் கிரைம் டிஎஸ்பி ராகவேந்திரா ரவி, திடீரென தனது பதவியிலிருந்து விலகியதை, அவர் டிஜிபிக்கு எழுதிய கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குறித்த புகார்?
ராகவேந்திரா ரவி, தனது கடிதத்தில், சில பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தனது பணியை முறையாக செய்ய விடவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் குழுவில் இருந்து விலக முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விலகல் முடிவால் காவல்துறையில் அதிர்ச்சி!
டிஎஸ்பியின் திடீர் விலகல் முடிவு, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய வழக்கை விசாரித்து வந்த அதிகாரியின் விலகல் காரணமாக, இந்த வழக்கின் விசாரணை எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதற்கான கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது இது தொடர்பாக அதிகாரப்பூர்வ விளக்கம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-யாழினி வீரா