
ரோம், 15 பிப்ரவரி — கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் (88) உடல்நலக் குறைவு காரணமாக ரோம் நகரின் ஜெமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் அறிவித்துள்ளது.
சிறுவயதில் ஒரு நுரையீரல் அகற்றப்பட்ட போப் பிரான்சிஸ், நீண்ட காலமாகவே உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி (பிராங்கைட்ஸ்) இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், உடல்நலக் குறைவு இருந்தபோதிலும், அவர் தொடர்ந்து மதப்பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால், வெள்ளிக்கிழமை அவரது முகம் வீங்கி வெளிறியதை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-வீரா இளங்கோவன்