
பத்துமலை, 11 பிப்ரவரி — தமிழர் கடவுள் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில அரசு 61 கோவில்களுக்கு மொத்தமாக ரி.ம. 5,61,000 வெள்ளி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த உதவி, கோவில்களின் மேம்பாட்டிற்கும், திருவிழா ஏற்பாடுகளுக்குமான உதவியாக வழங்கப்பட்டதாக சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டிலிருந்து, தைப்பூச விழாவிற்கு முன் கோவில்களுக்கு மானியம் வழங்கும் இந்த நன்மதிப்பு செலுத்தும் நிகழ்வை சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான நிதி நேற்று இரவு வழங்கப்பட்டது.
பத்துமலையில் தைப்பூச விழா சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிலாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் (மந்திரி புசார்) டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பாப்பாராயுடு, இந்த மானியம் சம்பந்தப்பட்ட கோவில்களின் மேம்பாட்டிற்காகவும், பக்தர்கள் வசதிக்காகவும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், சமய வழிபாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிலாங்கூர் மாநில அரசு சமத்துவ அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என்றார்.
அதோடு, இந்திய சமுதாயத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு மாநில அரசு பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருவதாகவும், இந்த வாய்ப்புகளை இந்திய சமூகம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், துணை அமைச்சர் தியோ நீ சிங், செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
-வீரா இளங்கோவன்