
கோலாலம்பூர், ஏப்ரல் 4: நாட்டில் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில், குறிப்பாக டிக்டாக் போன்ற தளங்களில் காதல் பெயரில் பல்வேறு மோசடிகள் அதிகரித்து வருகின்றன என்று சமூக சேவையாளர் ஜனா தெரிவித்துள்ளார். இத்தகைய மோசடிகளை தடுக்க போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அண்மையில், டிக் டாக் மூலமாக அறிமுகமான நபர், ஒரு பெண்ணை காதல் பெயரில் மோசடி செய்ததால் அப்பெண் டிக்டாக் நேரலையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நேரலையை கண்ட ஜனா, உடனடியாக தனது நண்பர் மூலம் அந்த பெண்ணை பாதுகாப்பாக மீட்டு, அவளுக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் காணப்படும் ஆபத்துகளை சுட்டிக்காட்டும் முக்கிய எடுத்துக்காட்டு என அவர் தெரிவித்தார்.
இணையதளங்களில், குறிப்பாக தனியாக வாழும் பெண்கள் இந்த மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக ஜனா கவலை தெரிவித்தார். பெண்களும், ஆண்களும் சமூக வலைத்தளங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அறிமுகமில்லாத நபர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தழல் மீடியாவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் தெரிவித்தார்.
இவ்வகை மோசடிகளை தடுக்கும் ஒரே வழி, மோசடியில் ஈடுபடும் நபர்களை போலீசாரிடம் உடனடியாக ஒப்படைத்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. எந்தவித பாரபட்சமும் இன்றி, குற்றவாளிகளை உரிய முறையில் கையாள வேண்டும் என்று ஜனா வலியுறுத்தினார்.
மேலும், மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பகிராமல் இருப்பதே மிகவும் பாதுகாப்பானது என்றும் தங்களின் இருப்பிடம், வேலை இடம், வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய தகவல்களை வெளிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
இணைய மோசடிகள் அதிகரித்து வரும் இந்த நிலையில், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டாலே, இதுபோன்ற ஆபத்துகளை தவிர்க்க முடியும் என ஜனா வலியுறுத்தினார்.
-வீரா இளங்கோவன்