Tazhal Media – தழல் மீடியா

/ Mar 06, 2026
Latest News
tms

13வது மலேசியத் திட்டம்: இந்திய சமூக முன்னேற்றத்திற்கு 11 பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

படம்: வீரா

கோலாலம்பூர், ஜூலை 4:மலேசியாவின் 13வது தேசியத் திட்டத்தில் இந்திய சமூகத்தின் நலன்களும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்பதற்காக, 11 பரிந்துரைகள் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

கல்வி, பொருளாதாரம், தொழில்முனைவு மற்றும் திறனாய்வு மேம்பாடு போன்ற முக்கிய துறைகளை மையமாகக் கொண்டு கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் மற்றும் பயிற்சி பட்டறைகள் நடைபெற்று, சமூகத்தின் உண்மையான தேவைகள் அடையாளம் காணப்பட்டன. இவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகள் கடந்த ஜூன் 23ஆம் தேதி பொருளாதார அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மிக்கு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த பரிந்துரைகளின் முக்கிய நோக்கம், மலேசிய இந்தியர்களுக்கு சமத்துவமான வாய்ப்புகளை உருவாக்குவதும், கல்வி மற்றும் தொழில்துறையில் முன்னேற்றத்தை உறுதி செய்வதும் ஆகும். குறிப்பாக, கல்வியை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு தொடக்கத்திலிருந்தே உறுதியான கல்வி மற்றும் பின்னர் தொழில்திறன் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பாலர் பள்ளிகளின் அடிப்படை தேவைகளைத் தீர்க்கும் வகையில், தமிழ்ப்பள்ளிகளில் அவசியமான இடங்களில் புதிய பாலர் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அதேபோல் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள தமிழ்ப்பள்ளிகளை, இந்தியர்கள் திரளாக வசிக்கும் பகுதிகளுக்கு மாற்றும் திட்டமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பசுமை தொழில்நுட்பம், டிஜிட்டல் வர்த்தகம், இளம் தொழில் முனைவோர் வாய்ப்புகள் உள்ளிட்ட நவீன துறைகளில் இந்திய இளைஞர்களும் பெண்களும் தங்கள் இடத்தைப் பிடிக்க உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பரிந்துரைகள், பிரதமர் துறை அமைச்சின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் மற்றும் அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒத்துழைப்பில் தயாரிக்கப்பட்டதாகவும், இவை சமூகத்தின் சக்திவாய்ந்த மாற்றத்துக்கு வழிகாட்டும் எனவும் சார்ல்ஸ் சந்தியாகோ பேட்டி முடிவில் கூறினார்.

-யாழினி வீரா

Scroll to Top