
கோலாலம்பூர், ஏப்ரல் 3: புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயாவில் ஏற்பட்ட வாயுக் குழாய் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு Tenaga Nasional Berhad (TNB) நிவாரண உதவியை அறிவித்துள்ளது.
TNB இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 2025 மாத மின்சாரக் கட்டணத்தில் 100% தள்ளுபடியை வழங்கும் ஒருமுறை நிவாரணத் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது. இந்த தள்ளுபடி ஏப்ரல் 2025 மின்சாரக் கட்டணத்தில் நேரடியாக கணக்கில் சேர்க்கப்படும்.
இதன்மீது, மின்சாரம் மீண்டும் இணைக்கும் கட்டணங்களை தள்ளுபடி செய்யும், தாமத கட்டணச் செலவுகளை விலக்கு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட வீடுகளில் மின்சார இணைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் இணைந்து மின்கம்பி அமைப்புகளுக்குப் பரிசோதனை செய்யப்படும்.
தீவிபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஏப்ரல் 2 முதல், காவல் துறை செயல்பாட்டு அறைக்கு அருகில் ஒரு சேவை கவுன்டர் TNB-வால் திறக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மின்சாரம் தொடர்பான உதவிகளை இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
“TNB அதிகாரிகள் நேரடியாகவும் மக்களை அணுகி தேவையான உதவிகள் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரின் நலத்திற்காக தொடர்ந்து நிலைமையை கண்காணிக்க TNB உறுதிபூண்டுள்ளது,” எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-யாழினி வீரா