
கிள்ளான், 9 ஏப்ரல்: கிள்ளானில் டெங்கி பரவல் மேலும் தீவிரமடைந்த நிலையில், மொத்தமாக ஐந்து பகுதிகள் அதிகமாக பாதிக்கபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளன. கிள்ளான் சுகாதாரத் துறை இயக்குநர் அஸ்மி முஜி கூறியதாவது, சமீபத்தில் நான்கு புதிய பாதிக்கப்பட்ட பகுதிகள்—செக்ஷன் 32 (ஜாலான் சுங்கை சோங்காக் 32/51A முதல் 32/51F வரை), காம்போங் பெந்தாமார், தாமன் ஸ்ரீ அந்தாலாஸ் மற்றும் கிளாங் வில்லா அபார்ட்மெண்ட்ஸ்—அறிவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
முன்னதாக, முதல் பாதிக்கபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட கம்போங் தெலோக் கிரியில், ஏப்ரல் 5ஆம் தேதி ஒரு 8 வயது மாணவன் டெங்கி காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த பகுதியில் 50 நாட்களில் 10 உறுதிசெய்யப்பட்ட தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில், அந்தப் பகுதி ஏப்ரல் 18 வரை ஹாட்ஸ்பாட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
MBDK மற்றும் கிள்ளான் மாவட்ட சுகாதாரத்துறை ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும், புதிய தொற்றுகள் அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சமூக ஊடகங்கள் வழியாக, கிராமத் தலைவர், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக சேர்ந்து சுத்தப்பணிகளில் ஈடுபட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கி வேகமாக பரவிய இடங்களில் தாமான் தெலுக் கெடோங் இண்டா, பண்டார் போத்தானிக், பெர்டானா வில்லா அபார்ட்மெண்ட்ஸ் மற்றும் தாமான் கிள்ளான் உத்தமா ஆகியவையும் அடங்குகின்றன. ஏப்ரல் 6ஆம் தேதி வரை கிள்ளான் மாவட்டத்தில் 1,473 டெங்கி சம்பவங்கள் மற்றும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
-யாழினி வீரா