
கோலாலம்பூர், ஜனவரி -17, தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை அனிமேஷன் வடிவில் கேலி செய்யும் ஒரு டிக்டாக் வீடியோ வைரலாகி, இந்து சமுதாயத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று மலேசிய இந்து ஆலயங்கள் பேரவைத் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா தெரிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி இதை உருவாக்கியுள்ளனர். டிக்டோக் போன்ற தளங்கள் இத்தகைய உள்ளடக்கங்களை தானாகவே கட்டுப்படுத்துவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
குறித்த வீடியோ, “கோஷிஷ் லாமா” என்ற பெயரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் வெளியிட்டதாக சமூக ஊடகங்களில் வைரலானது. முருகனின் உருவத்தை கேலியாக காட்டும் இந்த செயல், இந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சு மற்றும் இலக்கவியல் அமைச்சு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் 1998 (சட்டம் 588) இன் கீழ் எடுத்த உரிய நடவடிக்கைகளுக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
ஆனால், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க அரசு மேலதிக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கோரினார்.