
கோலாலம்பூர், 31 ஜனவரி — கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தற்போதைய சிக்கல் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதுடன், அதற்கான தீர்வை விரைவாக கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி மட்டும் அல்ல, அவர்களின் பாதுகாப்பும் முதன்மையாக கருதப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டு, கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, தாவார் தேசிய பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக, இந்தப் பள்ளி அங்கு இயங்கி வந்த நிலையில், தாவார் தேசிய பள்ளிக்கு மறுசீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், தமிழ்ப்பள்ளிக்கு புதிய இடம் தேவைப்படுவதான நிலைமை உருவாகியுள்ளது.
“இந்தப் பிரச்சினை குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவையை கருத்தில் கொண்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்விக் கட்டமைப்பு இடர்ப்பாட்டிற்குள்ளாகக்கூடாது, அதே நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இவ்விவகாரத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க, அவர் கல்வியமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், தகவல் தொடர்பு மற்றும் கல்வி அமைச்சுகள் இணைந்து விரைவில் ஒரு தீர்வை அமல்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் உறுதி செய்யும் வகையில் விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தனது நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
-வீரா இளங்கோவன்