Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

“தலைவருடன் மீட் & க்ரீட்” போட்டி: மலேசிய ஊடகங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் – ரியாஸ் பதிவால் கிளம்பிய சர்ச்சை!

கோலாலம்பூர், 28 ஆகஸ்ட் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பி.ஆர்.ஓ. ரியாஸ் அஹமது, “மீட் & க்ரீட் தலைவர்” என்ற பெயரில் மலேசியாவில் மலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் அறிவித்த போட்டி முற்றிலும் அனுமதியற்றதும், போலியானதுமாகும் என்று கடந்த வாரம் “எக்ஸ்” (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் அறிவித்தார். மேலும் ரசிகர்கள் இதில் பங்கேற்க வேண்டாம் என்று எச்சரித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, மலேசியாவில் இயங்கி வரும் சில ஆன்லைன் ஊடகங்கள் ரியாஸின் பதிவை ஆதாரமாகக் கொண்டு செய்திகளை வெளியிட்டன. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு ரியாஸ் மீண்டும் விளக்கம் அளித்து, அந்த போட்டி உண்மையில் செல்லுபடியாகும் என்றும், தேவையான விவரங்களுடன் நடைபெறுகிறது என்றும் தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, மலேசியாவின் இணைய ஊடகங்கள் உடனடியாக அந்த விளக்கத்தையும் வெளியிட்டன. எனினும், போட்டியை நடத்தும் மலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம், “தவறான செய்தி பரப்பியதாக” குற்றம் சாட்டி, ஆன்லைன் ஊடகங்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திரு. கோபிநாத் – பிலிம் வியூஸ் விளக்கம்:-

மாலிக் ஸ்ட்ரிம்ஸ் வெளியிட்ட சட்டநோட்டீஸ் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிலிம் வியூஸ் நிறுவனர் திரு. கோபிநாத் தனது விளக்கக் காணொளியை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், பிலிம் வியூஸ் பல வருடங்களாக தொடர்ந்து இயங்கி வரும் நம்பகமான பொழுதுபோக்கு செய்தி தளமாக இருப்பதைக் குறிப்பிட்டார். தமிழ் சினிமா செய்திகள் பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் P.R.O-களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளிலிருந்தே பெறப்பட்டு வெளியிடப்படுவதாகவும், போட்டித் தொடர்பான செய்தியும் அதேபோல் வெளியிடப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

மேலும், மாலிக் ஸ்ட்ரிம்ஸ் போட்டி தொடர்பான உள்ளடக்கங்கள் பல நெட்டிசன்களிடையே குழப்பத்தையும் கருத்து வேறுபாடுகளையும் தூண்டியதாக அவர் குறிப்பிட்டார். தெளிவான விளக்கங்களை வழங்காததனால் சந்தேகங்கள் அதிகரித்ததாகவும் கூறினார். மேலும் இது தொடர்பாகத்தான் விளக்கப் பதிவை பதிவேற்றம் செய்ததாக குறிப்பிட்டார். அதேசமயம், சர்ச்சைக்கு பின்னர் இப்பொழுது போட்டிக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் மேலும் மூன்று வெற்றியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவை அவர் பாராட்டினார்.

திரு. கோபிநாத் மேலும் தெரிவித்ததாவது, “இது தான் முதல் முறையாக ஒரு சட்டநோட்டீஸ் கிடைத்திருக்கிறது. வழக்கமாக சந்தேகத்துக்குரிய செய்தி வந்தால், சம்பந்தப்பட்டவர்கள் என்னிடம் சாதாரணமாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு விளக்கம் கேட்பார்கள். ஆனால் இந்த முறை நேரடியாக சட்டநோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது உள்ளது,” என்றார்.

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் வெளியிட்ட அறிக்கை:-

“ஊடகங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை தாங்கும் தூண்களாக இருக்க வேண்டும். ஆனால் சிலர் அந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, தனிப்பட்ட பழிவாங்கல்கள், நேரடி தாக்குதல்கள், மற்றும் ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். உண்மையை சிதைத்து, பொய்யை உண்மையென பரப்பும் இந்த நிலையை எங்கள் நிறுவனம் கடுமையாக கண்டிக்கிறது.

எங்கள் நிறுவனத்தால் ஏற்கனவே பல முக்கியமான நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. எவரையும் வற்புறுத்துவதோ, பங்கேற்க கட்டாயப்படுத்துவதோ இல்லை. பங்கேற்பது ரசிகர்களின் தனிப்பட்ட முடிவு. எங்கள் சந்தைப்படுத்தல் முறைகள் குறித்து தவறான தகவல் பரப்பி, தேவையற்ற வகையில் எங்கள் கண்ணியத்தை குலைக்க முயற்சிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் ஆதரவாளர்களுக்கும், எங்களுடன் இணைந்து செயல்படும் அனைவருக்கும் நன்றி. வெளிப்படைத்தன்மை, தொழில்முறைத் தன்மை, மற்றும் நம்பிக்கையை காக்கும் நிகழ்வுகளையே நடத்துவோம்” என்று மாலிக் ஸ்ட்ரீம்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் தழல் மீடியாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய சிலர், “ரியாஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ பதிவை அடிப்படையாகக் கொண்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டார்கள். இதில் அவர்கள் பக்கம் எந்தத் எந்த தவறு இருக்கிறது” என்று கருத்துகளை பகிர்ந்தனர்.

இந்நிலையில் பிலிம் வியூஸ் சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர், “ரியாஸ் முதலில் போட்டி போலியானது என்றார், ஆனால் அந்த பதிவு இன்னும் எக்ஸ் தளத்தில் உள்ளது. அதை ஏன் நீக்கச் சொல்லவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது மலேசியாவில் ரஜினி ரசிகர்களிடமும், ஊடக உலகிலும் பெரும் விவாதமாகி வருகிறது.

-வீரா இளங்கோவன்

Scroll to Top