
ஸ்ரீநகர், 9 ஏப்ரல்: நடப்பாண்டில் காஷ்மீரில் பண மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7,200 வங்கிக் கணக்குகளை காவல்துறை கண்டுபிடித்து முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாடிக்கையாளர்களிடம் பணம் தருவதாகக் கூறி, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று மோசடி நடத்தும் வழக்கு கடந்த காலங்களில் அதிகரித்து வருவதாக ஸ்ரீநகர் காவல் கண்காணிப்பாளர் இம்தியாஸ் ஹுசைன் கூறினார்.
இன்று அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள் மீது சோதனை நடத்தப்பட்டு, 7,200 கணக்குகள் இணையக் குற்றம் மற்றும் பண மோசடிக்குப் பயன்படுத்தப்பட்டதாக உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காவல்துறை அவற்றை முடக்கியதாக அறிவித்துள்ளது.
இந்தக் கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் பல கோடியைத் தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, எவ்வளவு தொகை மோசடியாக செல்லப்பட்டது என்பதை கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை 7,200 வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டதுடன், காஷ்மீரில் இதுவரை 30,000க்கும் மேற்பட்ட மோசடி கணக்குகள் இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், இந்த சம்பவங்களில் 21 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், அதில் 19 பேர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர்கள்.
-இளவரசி புவனஷங்கரன்