
பெட்டாலிங் ஜெயா, 9 ஏப்ரல்: எக்ஸ்பிரஸ் ரெயில் லிங்க் சன்டிரியன் பெர்ஹாட் (ERL) ரயில் சேவை, கேபிள்கள் மர்மமாக வெட்டப்பட்டதால் இரண்டாவது நாளாகவும் தடைபட்டுள்ளது. இதனால் KLIA எக்ஸ்பிரஸ் மற்றும் KLIA டிரான்சிட் இரண்டும் பாதிக்கப்படுள்ளது.
இந்த தடங்கலுக்குப் பிறகு, புத்ராஜாயா, சைபர்ஜாயா மற்றும் கே.எல் சென்ட்ரல் இடையே காலை 6 மணி முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைநிலை பஸ்கள் இயக்கப்படுகின்றன. சாலாக் திங்கி மற்றும் KLIA வானூர்தி நிலையங்கள் (Terminal 1 மற்றும் 2) இடையிலும் 6.20 மணிக்கு தொடங்கி, அதே நேர இடைவெளியில் சேவைகள் நடைமுறையில் உள்ளன.
ERL பயணிகள் மாற்று போக்குவரத்தைக் கையாளுமாறு, மற்றும் தங்கள் பயணத்தை முன்னதாகவே திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
நேற்று காலை 6.20 மணிக்கு, சலாக் திங்கி மற்றும் KLIA Terminal 1 இடையே உள்ள KM48.5 பகுதியில் கேபிள்கள் வெட்டப்பட்டதாக நிறுவனம் உறுதிப்படுத்தியது. இதனால், காலை 6.58 மணிக்கு KLIA Terminal 2 மற்றும் 7.00 மணிக்கு கே.எல் சென்ட்ரலில் இருந்து இணைந்த ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.
சேவை சரிவரும்போது, நேற்று காலை 10 மணிக்கு கே.எல் சென்ட்ரல் மற்றும் 9.48 மணிக்கு KLIA Terminal 2-இல் இருந்து ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன. தற்போது, சிக்னல் அமைப்புகள் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன.
-யாழினி வீரா