
கோலாலம்பூர், 25 மார்ச்: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, வர்ணம் மலேசியா மற்றும் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகம், யாயசான் வங்கி ரக்யாட் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில், மகளிர் மேம்பாட்டிற்கான முதலீடு: விரைவான செயல்பாடு என்ற கருத்தெழுச்சியை பிரதிபலிக்கும் நிகழ்வு ஷாங்க்ரி-லா ஹோட்டல், கோலாலம்பூர் இல் நடைபெற்றது.
இந்த நிகழ்வு மகளிரின் சாதனைகள், பங்களிப்புகள் மற்றும் உறுதுண்மையை பாராட்டி, பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதன் அவசியத்தையும் முன்னிலைப்படுத்தியது.

தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சரின் தனிச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, நிகழ்வைத் திறந்து வைத்தார். நிகழ்வின் தொகுப்பாளராக ரேவதி மரியப்பன் பணியாற்றினார்.
தமது உரையில், இந்திய சமூகத்திற்காக அமைச்சகம் முன்னெடுத்து வரும் பல்வேறு உதவித் திட்டங்கள், குறிப்பாக இந்திய மகளிரின் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் முயற்சிகள் குறித்து டத்தோ அன்புமணி பாலன் விளக்கினார். இந்திய மகளிரின் பொருளாதார பங்கேற்பை மேம்படுத்த அமைச்சகம் உறுதியுடன் செயல்பட்டு வருவதை அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வில் தோழமைப் பெண்மணிகள், தொழில் முனைவோர், பொது வாழ்க்கைத் தலைவர்கள் பங்கேற்றனர். தோழமை பெண்கள் கருத்தரங்கு நடைபெற்றது, இதில் டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம், டத்தின்ஸ்ரீ ஷைலா வி, கோகிலா வாணி, டாக்டர் திவியா கலைசெல்வன் ஆகியோர் பங்கேற்று தங்கள் வெற்றிக்கான பயணம், எதிர்நீச்சல்கள், மற்றும் வெற்றிக்கு வழிவகுத்த உறுதியான மனப்போக்கை பகிர்ந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, SHEro விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சட்டம் மற்றும் பாதுகாப்பு துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக துனை காவல் ஆணையர் (ஓய்வு) டத்தோ சசிகலா தேவி சுப்ரமணியம் SHEro தலைமைப் பதக்கத்தினைப் பெற்றார். SHEro தொழில்முனைவோர் விருது விக்னேஸ்வரி நராஜா (Vyna) என்பவருக்கு வழங்கப்பட்டது, அவர் Fancy Custom Cakes மற்றும் Zest Cakes & Cafe நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சினிமா துறையில் சிறப்பான பங்களிப்பை முன்வைத்ததற்காக சங்கீதா கிருஷ்ணசாமி SHEro சினிமா ஐகான் விருதினைப் பெற்றார்.

இந்த விழா மகளிரின் சாதனைகளைப் போற்றுவதோடு, அவர்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சிக்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கான அவசியத்தையும் வலியுறுத்தியது. மகளிரின் உறுதியான பங்குபற்றல், முயற்சி மற்றும் சமூகத்தில் அவர்களின் தாக்கத்தை அழுத்தமாகக் காட்டும் ஒரு மிகப்பெரிய தளமாக இது அமைந்தது.
-யாழினி வீரா