
கோலாலம்பூர், 11 மார்ச் — கோலாலம்பூர் குடிவரவு துறை அதிகாரிகள் தேசா பெட்டாலிங் மற்றும் புக்கிட் ஜாலிலில் உள்ள இரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இன்று காலை 11 மணிக்கு மேற்கொண்ட சோதனையில், அனுமதியின்றி அழகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒன்பது வெளிநாட்டவர்களை கைது செய்தனர்.
கோலாலம்பூர் குடிவரவு இயக்குநர் வான் முகமட் சௌபி வான் யூசொஃப் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்கள் ஏழு ஆண்கள், இரண்டு பெண்கள் ஆகிய வியட்நாமியர்கள் என தெரிவித்தார். மேலும், இதற்கு துணைபோகும் முகவர்களாக இருந்ததாகக் கூறப்படும் ஒரு உள்ளூர் ஆண், ஒரு பெண் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையின் போது கோலாலம்பூர் சுகாதாரத் துறையினரும் உடனிருந்தனர். முகவர்கள், அழகு அறுவை சிகிச்சை பெறும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையில் 5% முதல் 10% வரையிலான கமிஷன் பெற்றதாகவும் தெரியவந்துள்ளது.
பெர்னாமா செய்தியாளர்கள் அவ்விடம் சென்றபோது, முக, மூக்கு, கண் இமை மற்றும் தோல் அழகு தொடர்பான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அனுமதியற்ற வியட்நாமிய ஆணொருவரே மருத்துவராக செயல்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேவைகள் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-கவியரசி கிருஷ்ணன்