
குவாந்தான், 17 பிப்ரவரி — பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வாழ்க்கையின் சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் மூதாட்டி பின்நம்மாள் குட்டன் (85) என்பவருக்கு உதவி வழங்கியுள்ளார். உயர்ந்த இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் மற்ற உடல்நலக்குறைவுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பின்நம்மாளின் நிலைமையை உணர்ந்து, அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பகாங், குவாந்தான் செமாம்புவில் உள்ள அவரது இல்லத்தில், “சியாரா மடானி” திட்டத்தின் கீழ் பிரதமரின் அரசியல் செயலாளர் டத்தோ அகமட் பார்ஹான் பௌஸி இந்த உதவியை நேரில் வழங்கினார்.
“இந்த நேரில் சந்திப்பின் போது, பின்நம்மாள் அம்மாளின் வாழ்க்கைத் துயரங்களை கேட்டறிந்து, அவருடைய சிரமங்களை பகிர்ந்துகொண்டேன். அவருக்கு ஆதரவளிக்கும் வகையில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சார்பில் சிறிய உதவியை வழங்கினேன்,” என்று அகமட் பார்ஹான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
“பின்நம்மாள் அம்மாளுக்கு நல்ல ஆரோக்கியமும், வாழ்க்கையில் தொடர்ந்த நலமும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என அவர் குறிப்பிட்ட இந்த பதிவு, பிரதமர் அன்வார் இப்ராஹிம் அவர்களாலும் பகிரப்பட்டது.
-யாழினி வீரா