
டாவோஸ், 22 ஜனவரி — மலேசிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், 2025ஆம் ஆண்டு உலகப் பொருளாதார உச்சநிலை மாநாட்டில் (WEF) கலந்து கொள்ள மூன்று நாட்கள் அலுவல் பயணமாக சுவிட்சர்லாந்து டாவோஸ் சென்றடைந்துள்ளார். உலகளாவிய மற்றும் வட்டார சவால்களைச் சமாளிக்க சிறந்த ஒத்துழைப்பு வழிகளை விவாதிக்கவே பிரதமர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
செவ்வாய்கிழமை மலேசிய நேரப்படி அதிகாலை 1.25 மணிக்கு அன்வார் பயணித்த விமானம் சூரிச் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையத்தில் அவரை, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான மலேசிய நிரந்தரப் பிரதிநிதி டத்தோ நட்சீரா ஒஸ்மான், உலக வர்த்தக அமைப்பின் மலேசிய நிரந்தரப் பிரதிநிதி ஷாரில் சஸ்லீ கஸாலி மற்றும் பெர்னிலுள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அஹ்மத் பென்யாமின் நூர் ரஹிமின் ஆகியோர் வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டாவோஸ்-க்ளோஸ்டர்ஸ் பகுதிக்குச் செல்வதற்காக பிரதமர் தரைவழியாகப் பயணம் செய்தார்.
இதற்கு முன், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்திற்கு பிரதமர் அலுவல் பயணங்களை மேற்கொண்டு அந்த பயணங்களை முடித்த பின், டாவோஸ் சென்றுள்ளார். உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சவால்களை நோக்கி மலேசியாவின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்.
-வீரா இளங்கோவன்