
கோலாலம்பூர், 6 ஏப்ரல்: தற்போதைய உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் மனித வாழ்வை மேம்படுத்தும் ஒரு முக்கிய சாதனமாக செயல்படுகின்றன எனத் தெரிவித்தார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன்.
“தொலைபேசியின் கண்டுபிடிப்பு உலகத்தை நம் உள்ளங்கையிலேயே கொண்டு வந்தது. ஆனால் அதே சமயம், புதிய சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்கள் மகிழ்ச்சி தருகிறதா? அல்லது மன உளைச்சலுக்குப் பங்காற்றுகிறதா?” என்ற கேள்வி நம்மில் பலரையும் சிந்திக்க வைக்கிறது” என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில், “நீயா நானா” கோபி வழங்கிய தன்முனைப்பு பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக் குறிப்பிட்ட அவர், சமூக ஊடகங்களை அறிவோடு, பொறுப்போடு பயன்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.
அண்மையில் பிரிக்பீல்ஸ்சில் செல்வ மேரி ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் தலைமை வகித்ததிலும் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார். நிகழ்ச்சியில், சமூக ஊடகங்கள் எவ்வாறு நம் உணர்வுகளை பாதிக்கின்றன, நம் நேரத்தை இழக்கச் செய்கின்றன, மற்றும் நம் வாழ்க்கை தரத்தை எவ்வாறு குறைக்கக்கூடியதாக இருக்கின்றன என்பதையும் விரிவாக விளக்கப்பட்டது.

“அறிவியல் கண்டுபிடிப்புகள் நம்மை ஆளக்கூடாது, நாம் அவற்றை ஆள வேண்டும்” என்பது நம் நெறிமுறையாக இருக்க வேண்டும் என்றார் டத்தோ ஸ்ரீ டாக்டர் சரவணன்.
இளைஞர்கள் சமூக ஊடகங்களில் சிக்கிக்கொள்ளாமல், அதை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தி நலமுடனும், பொறுப்புடனும் வாழ வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைத்தார்.
அத்துடன், சமூக ஊடகங்களின் உளவியல் தாக்கங்களைப் புரிந்து கொண்டு, அதனை கட்டுப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்வது இன்று அவசியமானதாக உள்ளதாகவும் கூறினார்.
-யாழினி வீரா