
சுபாங் ஜெயா, 1 ஏப்ரல்: புத்ரா ஹைட்ஸில் உள்ள எரிவாயு குழாய் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு மற்றும் பெட்ரோனாஸ் இணைந்து நிவாரண உதவி வழங்குகின்றன.
பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு RM5,000, மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு தலா RM2,500 நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இந்த நிவாரணம், மக்கள் தற்காலிக செலவுகளை சமாளிக்க உதவும். மேலும், வீட்டின் முழு சேதத்திற்கும் அரசு மற்றும் பெட்ரோனாஸ் இணைந்து கூடுதல் உதவி வழங்கும் பிரதமர் தெரிவித்தார்.
மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி, துணைப் போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ அயோப் கான் மைதீன் பிட்சாய், மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின் தலைவர் டத்தோ நூர் ஹிஷாம் முகமது ஆகியோரும் பிரதமருடன் இணைந்து தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டனர்.
இச்சம்பவம் 500 மீட்டர் நீளமுள்ள பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்டது. தற்போதைய நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுபாங் ஜெயா தீயணைப்பு நிலையம் உள்பட புச்சோங், ஷா ஆலம், கிள்ளான் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தின.
இந்த எரிவாயு குழாய் வெடிப்பில் 112 பேர் காயமடைந்தனர். 190 வீடுகளும், 148 வாகனங்களும் சேதமடைந்தன. மேலும் 11 மோட்டார்சைக்கிள்களும் கருகின. காயமடைந்தவர்களில் 145 பேர் சைபேர்ஜெயா, புத்ரா ஜெயா மற்றும் செர்டாங் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்திவிபத்தில் சிக்கிய 350 காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. தீயின் அலைகள் 20 மாடிகளுக்கு உயரமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அமிருதின் ஷாரி, அருகிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றியதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசலில் தற்காலிக தங்குமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேல் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில், அவை உடனடியாக பகிரப்படும்.
-முல்லை மலர் பொன் மலர் சோழன்