Tazhal Media – தழல் மீடியா

/ Jun 07, 2026
Latest News
tms

நாட்டின் 530 தமிழ்ப்பள்ளிகளுக்குச் ‘நித்திரைக் கதைகள்’ நூலை பரப்பும் பேரவையின் புதிய முயற்சி

கோலாலம்பூர், 10 டிச. – மலேசியாவில் உள்ள 530 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 5,000 ‘நித்திரைக் கதைகள்’ புத்தகங்களை வழங்குவதை முக்கிய இலக்காகக் கொண்டு, மலேசிய முன்னாள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சங்கங்களின் பேரவை புதிய கல்வி விழிப்புணர்வு திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

பேரவையின் துணைத் தலைவர் குமரன் தெரிவித்ததாவது, “வசிப்பதை நேசிப்போம்” என்ற வாசிப்பு ஊக்க திட்டத்தின் தொடர்ச்சியாகவே ‘நித்திரைக் கதைகள்’ எனப்படும் இந்த சிறுவர் நூல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முனைவர் கஸ்தூரி மற்றும் ஆசிரியர் நிரோசா இணைந்து உருவாக்கிய 61 சிறுகதைகளைக் கொண்ட இந்நூல், குழந்தைகளின் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் நோக்கத்தோடு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே குறைந்து வரும் வாசிப்புக் கலாச்சாரத்தை மீள உயிர்ப்பிக்க இப்படியான திட்டங்கள் அவசியம் எனவும், இந்த முயற்சியை நாடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் நிதி திரட்டி, தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான எதிர்கால கல்வி நடவடிக்கைகளை பெருக்குவது பேரவையின் முக்கிய நோக்கமாகும். மேலும் நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தில் இணையவும், புத்தகங்களை வாங்கி பள்ளிகளுக்கு வழங்கவும் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், “இந்நூல்கள் எந்த வழியிலாக இருந்தாலும் பள்ளிகளுக்கு சென்றடைவதே எங்களுக்கு முக்கியம்; இது மாணவர்களுக்கு பெரிய பலன் தரும்,” என தெரிவித்தார். விவரங்களுக்கு கேசவன் (012-3113343) அல்லது பார்த்திபன் (017-6834685) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

-யாழினி வீரா

Scroll to Top