
பினாங்கு, அக். 28 – பினாங்கில் உள்ள எஸ்.ஜே.கே.டி. லடாங் பத்து காவான் பள்ளி மாணவர்கள், World Sustainable Development Goal (WSDG) Challenge 2025 எனப்படும் உலகளாவிய போட்டியில் சர்வதேச தங்கப் பதக்கம் வென்று மலேசியாவின் பெருமையை உயர்த்தியுள்ளனர்.
இந்தப் பிரபலமான போட்டி, Multimedia University (MMU) மற்றும் MYSO அமைப்புகள் இணைந்து நடத்தியதாகும். செப்டம்பர் 26, 2025 அன்று சைபர்ஜயாவில் உள்ள MMU-வின் துவாங் கான்சலர் மண்டபத்தில் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த உலகளாவிய போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த திறமையான இளைஞர்கள் பங்கேற்றனர். அவர்களில் மலேசியாவை பிரதிநிதித்துவப்படுத்திய எஸ்.ஜே.கே.டி. லடாங் பத்து காவான் மாணவர்கள் — திவ்யாஶ்ரீ குமாரன், கோமகன் பாலா, மற்றும் ப்ரஷிதா பிரியா ஹரேன் ஆகிய மூவரும் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தனர்.
மாணவர்களை வழிநடத்திய ஆசிரியர் பிரேமலதா அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பள்ளி PIBG குழுவின் உறுதியான ஆதரவு இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
இவ்வெற்றி, மாணவர்களின் திறமை, படைப்பாற்றல் மற்றும் நிலைத்த உலகை உருவாக்கும் அவர்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
-யாழினி வீரா



