
திரெங்கானு, 12 ஜனவரி– திரெங்கானு மாநிலம் சுக்கையில் உள்ள படாங் அஸ்தகா சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளி ஒருவரை அடித்த சம்பவம் குறித்து தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“சம்பவத்திற்கான மேல்நடவடிக்கைகளை எடுக்க அமலாக்க தரப்பிடம் நாம் ஒப்படைத்துள்ளோம். இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றம் செய்தது உறுதியாகினால், தேசிய சட்டத்துறை மூலம் நீதிமன்றத்தில் அவர்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று கிளந்தான் மாநில ஊடகவியலாளர்களுடன் நடந்த சந்திப்பின் போது, இந்த கருத்துகளை ஃபஹ்மி ஃபட்சில் வெளிப்படுத்தினார்.
சம்பவம் தொடர்பான ஒரு நிமிடம் 52 விநாடிகள் கொண்ட காணொளி கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவியது. அதில், 47 வயதுடைய மாற்றுத்திறனாளி ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள், சந்தையில் உள்ள விற்பனைக் கடையில் மோதியதைத் தொடர்ந்து ஏற்பட்டதாகக் கருதப்படும் தாக்குதல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மோட்டார் சைக்கிள் மோதியதில் உணவுப் பொருட்கள் கீழே விழுந்து சிதறியது, இதுவே சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தாக்குதலுக்குள்ளான மாற்றுத்திறனாளி நியாயம் பெற வேண்டும் என்று பல தரப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
-வீரா இளங்கோவன்