
கோலாலம்பூர், 15 பிப்ரவரி — மதம் தொடர்பாக கருத்துக்களை வெளிப்படுத்தும் போது எல்லா தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் வலியுறுத்தினார். கருத்துச் சுதந்திரம், மற்ற மதங்களை அவமதிக்க அல்லது இழிவுபடுத்த ஒரு உரிமையாக அமையக்கூடாது என அவர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “மதம் குறித்து தவறான தகவல்கள் அல்லது தீவிரமான கருத்துக்கள் பரப்பப்படும்போது, அது சமூக உறவுகளை பாதிக்கும். நம் நாடு பல்வேறு மத, கலாச்சார பன்முகத்துடன் கூடியதாதலால், இந்த வேறுபாடுகளை பலமாகவே பார்க்க வேண்டும். ஒருமைப்பாடு, ஒற்றுமைக்கு அடித்தளமாக இருக்க வேண்டும்.”
உலக மத நல்லிணக்கம் வாரத்தை முன்னிட்டு மலேசிய புத்த, கிருத்தவ, இந்து, சீக்கிய, தாவோ மைய ஆலோசனை கவுன்சில் (MCCBCHST) மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் இணைந்து நடத்திய ‘ஜெஜாக் ஹார்மோனி’ நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு பேசினார்.
அத்துடன், மதம் மற்றும் இனத்துடன் தொடர்புடைய விவாதங்களில் மக்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றும், கருத்துச் சுதந்திரத்தை சமுதாய ஒற்றுமையை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“சமூக ஊடகம் (Social Media) தகவல்களை பரப்பும் மிகப் பெரிய சாதனம். எனவே, அதை முழுமையாக பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்” எனவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, MADANI Harmony Initiative திட்டத்தின் இலக்குகளை சாதிக்க, மத அமைப்புகள் சமாதானத்தை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பங்கேற்பாளர்கள் மச்ஜித் அல்-ஹிதாயா, செந்துல் பாசார் முதல் குருத்வாரா சாஹிப், செந்துல் வரை நடைபயணம் செய்து நல்லிணக்கத் தூதர்களாக செயல்பட்டனர்.
–வீரா இளங்கோவன்