
பத்துமலை, 3 பிப்ரவரி — மலேசியாவின் அடையாளமாக திகழும் பத்து மலை ஆற்றங்கரையில் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு 20 அடி உயர சக்தி வேல் நேற்று கம்பீரமாக நிறுவப்பட்டது. தைப்பூசத் திருவிழா நேரத்தில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், முன்னதாக வேலை வணங்குவதற்கான இடம் தேவை என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்ததையடுத்து பத்து மலை நிர்வாகம், இன்று பக்தர்களின் எண்ணத்தை நிறைவேற்றியது.
வேல் நிறுவும் புனித நிகழ்ச்சி கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைவர் தான் ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில், நேற்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வில் சுமார் 200 பக்தர்கள் பங்கேற்று நேரில் தரிசனம் செய்து, வேல் வணங்கி ஆசீர்வாதம் பெற்றனர். இனி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், ஆற்றங்கரையில் வேல் தரிசனம் செய்து புனித பயணத்தை தொடரலாம்.
தான் ஸ்ரீ ஆர். நடராஜா, “இனி வரும் காலங்களில், இந்த வேல் பக்தர்களைக் காக்கும். அவர்கள் பக்தியுடன் நேர்த்திக்கடன் செலுத்த, இது ஒரு அருள் நிலையாக அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், மஹிமா தலைவர் மற்றும் தேவஸ்தான அரங்காவலர் டத்தோ சிவக்குமார், வரும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெற, பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என கேட்டுக்கொண்டார். பத்து மலையின் ஆற்றங்கரையில் நிறுவப்பட்ட 20 அடி சக்தி வேல், இந்த ஆண்டு தைப்பூச திருவிழாவுக்கு மேலும் மெருகூட்டும் என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லை.
இத்தகைய புனித முயற்சிகள், இந்திய சமூகத்தின் ஆன்மிக தளத்தைக் கட்டியெழுப்பும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.
-வீரா இளங்கோவன்