
புத்ராஜெயா, 8 ஏப்ரல்: 1MDB வழக்கில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் (IGP) காலிட் அபூ பாகர், விசாரணையை தடுக்க முயற்சிக்கவில்லை என ஓய்வுபெற்ற போலீசாரின் சாட்சியம் இன்று உயர்நீதிமன்றத்தில் வெளியானது.
முன்னாள் விசாரணை அதிகாரியான ஆர். ராஜகோபால், நஜீப்பின் முக்கிய வழக்குரைஞர் ஷஃபீ அப்துல்லா வினாக்களுக்கு பதிலளிக்கையில், தாம் எந்தவிதமான தலையீடுகளும் அல்லது விசாரணையை தாமதப்படுத்த அல்லது நிறுத்த எந்த உத்தரவும் பெறவில்லை என்று தெரிவித்தார்.
“நஜீப்பின் பிரதமராக இருந்த காலப்பகுதியில் கூட அவரால் அல்லது காவல் துறை தலைவரால் எனக்கு விசாரணையை நிறுத்தச் சொன்னதே இல்லை,” என ராஜகோபால் உறுதியாக கூறினார்.
2015 செப்டம்பரில் லாட் மஸூரா மான்சோர் என்பவரிடமிருந்து விசாரணை பொறுப்பை ராஜகோபால் பெற்றுக்கொண்டதாகவும், அவர் விசாரணையை தொடர உத்தரவிடப்பட்டதாகவும் சாட்சி அளித்தார். இந்த மாற்றம் புகிட் அமான் வணிக குற்ற விசாரணைப் பிரிவு துணை இயக்குநர் மொர்தாட்சா நஸரீன் மூலம் நிகழ்ந்தது எனவும் அவர் கூறினார்.
2018 மே மாதம் மகாதீர் முகமதின் ஆட்சி வந்த பிறகு, அவரிடம் விசாரணை நிலை குறித்து ராஜகோபால், அமர் சிங் மற்றும் புசிட் அமான் இயக்குநர் பூசி ஹருனுடன் இணைந்து PowerPoint வழியாக விளக்கமளித்தனர். மகாதீர் அதற்கு பின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.
விசாரணைச் சபையில் மேலும், நஜீப் நேரடியாக 1MDB நிதிகளை எங்கே செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாக ஆதாரம் உள்ளதா என கேட்கப்பட்டதற்கு, “அத்தகைய நேரடி ஆதாரம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் நிறுவனத்தின் சட்டக் கோட்பாடுகள் (M&A) படி, எந்த நடவடிக்கையும் இயக்குநர் குழு அனுமதித்து, பங்குதாரரான நஜீப் ஒப்புதல் அளித்த பிறகே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்,” என ராஜகோபால் பதிலளித்தார்.
1MDB வழக்கில் நஜீப், 25 ஊழல் மற்றும் பணம் ஊழியக்கான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகிறார். விசாரணை நாளை தொடரும்.
-வீரா இளங்கோவன்