
டோக்கியோ: ஜப்பானின் ஒபுனாட்டோ காட்டு பகுதியில் கடந்த ஒரு வாரமாக விஸ்வரூபம் எடுத்த காட்டுத்தீ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரியதாக பரவி வருகிறது. இந்த பேரழிவை கட்டுப்படுத்த 2000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
தற்போது, 2100 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் காட்டுத்தீ பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீயால் ஏராளமான வனப்பரப்பு சாம்பலாகி, 84 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தீயணைப்புப் பணிகளுக்கு 16க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு, மேலிருந்து நீர் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் உலகம் முழுவதும் காட்டுத்தீயால் பெரும் சேதங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இது மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.