
சென்னை, ஏப்ரல் 26 – தமிழகத்தில் பதின்ம வயதினருக்கான சமூக ஊடக பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், “16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவது, அவர்களது மனநலத்திலும் சமூகப் பழக்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என கவலை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “பல நாடுகளில் 16 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு திறன்பேசி மற்றும் சமூக ஊடக பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தமிழகமும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் தடையோ அல்லது கட்டுப்பாடோ கொண்டு வர வேண்டும்,” என்றார்.
இது இளைய தலைமுறையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் அவசியமான பரிந்துரை என அவர் சுட்டிக்காட்டினார்.
சட்டப்பேரவையில் அவரது கோரிக்கை உரையாடல் ஏற்பட்டதை அடுத்து, இதுபோன்ற முன்மொழிவுகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.