
கூச்சிங், 8 ஏப்ரல்: சவராக் மாநில சுங்கத் துறை (JKDM) , கடந்த பிப்ரவரி 25ம் தேதி, இந்நகரம் சுற்றியுள்ள மூன்று இடங்களில் நடத்தப்பட்ட தனித்தனி சோதனைகளில், சட்டவிரோத சிகரெட் மற்றும் மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு RM1.62 மில்லியனை தாண்டுகிறது.
சவராக் சுங்கத் துறை இயக்குனர் நொரிசான் யாஹ்யா தெரிவித்ததின்படி, முதற்கட்ட சோதனை முற்பகல் 9 மணிக்கு, பத்து ஒன்பதாம் மைல், பென்ரிசன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் நடத்தப்பட்டது. அங்கு 120,740 சிகரெட் துண்டுகள் மற்றும் 6,826.27 லிட்டர் மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒரு உள்ளூர் நபர் கைது செய்யப்பட்டார்.
அடுத்ததாக, பத்து முப்பது மணிக்கு, பத்து காவா நகரத்தில் நடந்த இரண்டாவது சோதனையில் 2,776.25 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.
மூன்றாவது சோதனை, தாமான் மாலிகான் என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் 331,520 சிகரெட் துண்டுகள் மற்றும் 13,681.92 லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டது. இங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்றொரு மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த மூன்று வழக்குகளும் அக்தா கஸ்தம் 1967ன் பிரிவு 135(1)(d) உட்பட விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன. குற்றம் நிரூபிக்கப்படின், குற்றவாளிகள் மீது அதிகபட்சமாக RM500,000 அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
நொரிசான் மேலும், மக்கள் சுங்கச் சட்டங்களை மீறிச் செயல்படும் எந்தவொரு நபரையும் குறித்து தகவல்களை வழங்க 1-800-88-8855 என்ற சுங்கத் துறையின் இலவச தொலைபேசி எண்மூலம் புகார் அளிக்கலாம் என்றும், அளிக்கும் தகவல்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
-யாழினி வீரா