
தெலுக் இந்தான், 31 ஜனவரி — பேராக் மாநிலத்தின் தெலுக் இந்தானில், 65 வயதான இந்திய மாதுவின் கழுத்தில் இருந்த நகையைப் பறித்து ஓடிய நபரை, போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஹிலிர் பேரா மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி அஹ்மத் அட்னான் பஸ்ரி தெரிவித்த தகவலின்படி, இந்த சம்பவம் ஜாலான் சுல்தான் அப்துல்லா, ஹூவர் பார்க்கில் உள்ள வீட்டில் நேற்று காலை 7 மணியளவில் நடந்துள்ளது.
சந்தேக நபர், மலர் மாலைகள் வாங்கவிருப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்ட மாதுவை அணுகியுள்ளார். அவர் மாலையை தயாரிக்கும்போது, சந்தேக நபர் பின்னால் இருந்து திடீரென நெருங்கி, தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார். பாதிக்கப்பட்டவர் எதிர்ப்பு தெரிவித்தபோது, சந்தேக நபர் அவரை வலுக்கட்டாயமாக தள்ளியதால், அவர் தரையில் விழுந்துள்ளார். பின்னர் அவசரமாக சங்கிலியை அறுத்து கொண்டு, அதனைப் பறித்து ஓடியுள்ளார்.
இந்த நகை பறிப்பினால், பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 1,500 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கழுத்து, கைகள், கால்கள், இடுப்புகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன என போலீஸ் அதிகாரி உறுதி செய்துள்ளார். இந்த சம்பவம் சிசிடிவி மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க போலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-யாழினி வீரா