
நீலாய், 26 பிப்ரவரி — நீலாயில் உள்ள ஜாலான் பெர்சியாரான் நெகிரி பகுதியில் ஏற்பட்ட நான்கு வாகன விபத்தில் 23 வயது பெண் உயிரிழந்தார்.
நீலாய் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரீன்டெண்ட் அப்துல் மலிக் ஹாசிம் தெரிவித்ததாவது, காலை 7.25 மணியளவில், 34 வயது டிரெய்லர் லாரி ஓட்டுநர் தன்னுடைய வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், பாதிக்கப்பட்ட பெண்ணின் காரின் பின்பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது.
“பூச்சோங்கிலிருந்து பண்டார் என்ஸ்டெக்கிற்கு சென்ற லாரி, முன்னிலையில் சென்ற பெண்ணின் காரில் மோதியது. இதனால், அந்த கார் முன்னால் சென்ற 59 வயது ஆண் ஓட்டிய மற்றொரு காரில் மோதியது. அதன்பின், அந்தக் காரும், முன்பு சென்ற லாரியில் மோதி நிலைமை மோசமடைந்தது,” என அவர் கூறினார்.
விபத்தில், தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றிய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரண்டாவது கார் ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார். ஆனால், இரு லாரி ஓட்டுநர்களும் காயமின்றி தப்பினர்.
இந்த வழக்கு சாலை போக்குவரத்துச் சட்டம் 1987 இன் 41(1) பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது. மேலதிக தகவலுக்கு, சம்பவம் கண்டவர்கள் போலீஸ் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் பி. சர்வீன் ராஜ் (011-2617 6424) என்பவரை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-யாழினி வீரா