
கோலாலம்பூர், 17 பிப்ரவரி — மலேசிய இந்திய திறன் பயிற்சி திட்டம் (மிசி), தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கடந்த நவம்பரில் தொடங்கிய பயிற்சித் திட்டங்கள் மூலம் 6,000 பேர் பயனடைந்துள்ளனர்.
மிசி பயிற்சியின் மூலம் பலர் தங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளனர். 18 வயது குமரேசன் என்பவரின் வெற்றிக்கதை அதற்கு சிறந்த உதாரணம். சமையல் மீது தனக்கு உள்ள ஆர்வத்தை தொழிலாக மாற்ற வேண்டும் என்ற கனவுடன், அவர் பினாங்கில் மிசியின் மேற்கத்திய உணவு சமையல் பயிற்சியில் சேரினார். வெற்றிகரமாக பயிற்சி முடித்த பிறகு, ஒரு முன்னணி உணவகத்தில் சமையலராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
“இந்த பயிற்சி திட்டம் எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது. இப்போது நல்ல சம்பளத்துடன் வேலை பெற்றுள்ளேன். என் குடும்பத்திற்கும் உதவ முடிகிறது. மடானி அரசாங்கத்திற்கும் மிசிக்கு எனது மனமார்ந்த நன்றி” என்று குமரேசன் தெரிவித்தார்.

மலேசியாவில் வேலைவாய்ப்பு குறைவதாக சிலர் குறை கூறினாலும், மிசி பயிற்சி திட்டங்கள் தொழில்துறையின் தேவைகளுக்கேற்ப திறன்களை வழங்கி வேலைவாய்ப்புகளை உறுதி செய்கின்றன.
இந்த திட்டத்திற்கு பினாங்கு மாநில அரசாங்கத்தின் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். டிசம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த பயிற்சி அமர்வில், அவரது தொகுதியில் உள்ள மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இந்த முயற்சிக்கு மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிற்கும், எச்ஆர்டி கோர்ப் முன்முயற்சிக்கும், டத்தோஸ்ரீ சுந்தரராஜூ தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மிசி பயிற்சி திட்டங்கள், திறமைகள் மூலம் சமூக முன்னேற்றத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
-யாழினி வீரா