
சிபூ, 2 மே : சிபூவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சோங் மணிஸ் எல்.கே.ஐ.எம். மீன்வள துறைமுகத்துக்கு அருகில் உள்ள நதியில், இன்று அதிகாலை ஆடவர் டான் சான் பெலாட்டி (வயது 40) தவறி விழுந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் (JBPM) சரவாக் மாநிலக் கிளையின் பி.ஜி.ஓ (PGO) மையம் வெளியிட்ட தகவலின்படி, சம்பவம் தொடர்பான அவசர அழைப்பு இன்று அதிகாலை 1.56 மணிக்கு பெறப்பட்டது.
கனோவிட்டின் சுங்கை மாபாய் பகுதியை சேர்ந்த டான் சான் பெலாட்டி, குறித்த நேரத்தில் தனது வேலை முடித்தவுடன் ட்ராவ்லர் கப்பலுக்கு திரும்பி ஓய்வெடுக்கச் செல்லும் போதே, ஜெட்டியில் இருந்து தவறி விழுந்தார். அவர் அந்த நேரத்தில் நீலக்கோலர் சட்டை மற்றும் குறுகிய ஜீன்ஸ் கால்சட்டையை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தஞ்சோங் மணிஸ் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஐந்து பேர் கொண்ட குழுவும், ஒரு ‘Fire Rescue Tender’ வாகனமும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை 3.23 மணிக்கு இடைநிறுத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கை, இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மாயமான நபரை பாதுகாப்பாக மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
-யாழினி வீரா