
கோலாலம்பூர்: இன்று அதிகாலை கோலாலம்பூர் – சிரம்பான் நெடுஞ்சாலையில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து இடைவெளிப் தடுப்புப் பகுதியை மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்ததாவது, காலை 5.57 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சுங்கை பெசி மற்றும் புக்கிட் ஜாலில் நிலையங்களில் இருந்து 10 உறுப்பினர்களுடன் இரண்டு மீட்புப் படைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன.
6.07 மணிக்கு சம்பவ இடத்தைச் சென்றடைந்த அதிகாரிகள், ஒரு தொயோட்டா ரக கார் கட்டுப்பாட்டை இழந்து பாதைத் தடுப்பு மரங்களை மோதி விபத்துக்குள்ளானதை கண்டனர். காருக்குள் மூன்று பெரியவர்கள் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மூவரும் மீட்கப்பட்ட போதும், மலேசிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அவர்கள் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இந்த விபத்துக்கான முழுமையான விசாரணையைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகள் 7.29 மணிக்கு முடிவுற்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
-யாழினி வீரா