
பெட்டாலிங் ஜெயா, 26 பிப்ரவரி — தனியார் மருத்துவமனையில் காப்புறுதி உறுதிமடல் (Guarantee Letter) மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள், நேரடியாக பணம் செலுத்தி பின்னர் இழப்பீடு கோரும் நோயாளிகளுடன் ஒப்பிடும்போது அதிக கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக துணை நிதி அமைச்சர் லிம் ஹுயி யிங் தெரிவித்தார்.
இந்தத் தகவல், தனியார் மருத்துவமனைகள் காப்புறுதி நிறுவனங்கள் மற்றும் தகாஃபுல் நிறுவனங்களுக்கு (ITO) வழங்கிய மருத்துவ கட்டண விலை மதிப்பீடுகளை ஆய்வு செய்த பிறகு வெளிச்சத்திற்கு வந்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டது.
“சிகிச்சை கட்டணங்கள் பற்றிய தகவல்கள் மிகவும் வெளிப்படையாக இல்லாததால், இந்த விவகாரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, மேலும் விரிவான ஆய்வு தேவை,” என்று அவர் நாடாளுமன்றத்தில் இன்று நடந்த கேள்வி-பதில் அமர்வில் தெரிவித்தார்.
இது தொடர்பாக பொது கணக்கு குழு (PAC) நடத்திய சமீபத்திய கருத்துக் கேட்டல் அமர்விலும், இதே பிரச்சனை முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
தற்போது, நிதி அமைச்சகம், சுகாதார அமைச்சகம், தனியார் மருத்துவமனைகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து தனியார் மருத்துவச் செலவினங்கள் மற்றும் மருத்துவ கட்டணங்களின் உயர்வை கட்டுப்படுத்தும் நீண்டகாலத் தீர்வு காண செயல்பட்டு வருகின்றன.
மேலும், மருந்துகளின் விலை வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுவான மருத்துவச் செலவுகளை ஒப்பீடு செய்யும் நடவடிக்கைகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும் என அவர் கூறினார்.
2023-ம் ஆண்டு மருத்துவ மற்றும் உடல்நலம் காப்புறுதி கொள்கைகளின் அடிப்படையில் அதிகமாகக் கோரப்பட்ட நோய்களில் நிமோனியா, முதுகெலும்பு பிரச்சினைகள், செரிமானக் கோளாறுகள், மற்றும் இதய நோய்கள் அடங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கட்டணங்கள் மற்றும் காப்புறுதி பிரீமியம் கட்டண மாற்றங்கள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறித்து இன்டக்ரேட்டட் கிளைம்ஸ் டேட்டாபேஸ் மூலம் அரசு ஆழ்ந்த ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
-யாழினி வீரா