
கோலாலம்பூர், 26 பிப்ரவரி — பள்ளி உணவகங்களில் குறைந்தபட்சம் சத்துணவுகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று மலேசிய பள்ளி உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இச்சங்கத்தின் செயலாளர் ஜஸ்மி ஹசன் கூறுகையில், உணவக உரிமையாளர்கள் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை கடைப்பிடித்து, தங்கள் உணவுகளைத் தயாரிக்க வேண்டும். அதாவது, உணவுகளில் செயற்கை சேர்க்கைகள், அதிக சர்க்கரை, மற்றும் செயலாக்கப்பட்ட உணவுப் பொருட்கள் இடம்பெறக்கூடாது.
“உதாரணமாக, மாணவர்கள் அதிக ஊட்டச்சத்து பெற, உணவகங்கள் கட்டாயமாக பழங்களை வழங்க வேண்டும். அதே நேரத்தில், அனுமதிக்கப்பட்ட கலோரிக் அளவின்படி உணவு வகைகள் இருக்க வேண்டும்,” என அவர் வியாழக்கிழமை (பிப். 26) பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல், தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் கூடுதல் உணவு திட்டத்தின் கீழ், உணவகங்களில் உணவின் கலோரிக் மதிப்பை வெளிப்படுத்தும் பதாகைகளை வைக்க வேண்டும். இது மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும்.
மேலும், ஒவ்வொரு பள்ளியும் உணவகத்திற்கான பொறுப்பான ஒரு ஆசிரியரை நியமித்துள்ளது. பள்ளி கல்வி அலுவலகமும் ஆண்டுக்கு இருமுறை ஆய்வு நடத்துகிறது. அதேசமயம், உள்ளூர் நிர்வாகமும் திடீர் சோதனைகளை மேற்கொள்கிறது.
பள்ளி உணவக உணவுகளின் விலையைப் பற்றியும் ஜஸ்மி பேசினார். “உணவக உரிமையாளர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட விலைகளை மட்டும் கொண்டிருக்க வேண்டும். ஆனால், தற்போதைய கச்சா பொருட்களின் விலை ஏற்றம் உணவக உரிமையாளர்களுக்கு சவாலாக உள்ளது. எனவே, அரசு மானியம் வழங்கியால், மாணவர்களுக்கு மலிவான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவது சாத்தியமாகும்” என்று அவர் கூறினார்.
மேலும், உணவக உரிமையாளர்கள் கட்டாயமாக உணவு பாதுகாப்பு பயிற்சி மற்றும் டைபாய்டு தடுப்பூசி பெற வேண்டும் என்றும், விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
-யாழினி வீரா