
சண்டாகான், 2 ஏப்ரல்: சண்டாகான் கடலில் மூழ்கியவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட மூன்று நாள் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையின் முடிவில், இறுதி உயிரிழந்தவரான 6 வயது சிறுமி அட்ஸ்லிந்தா அட்ஸ்வான் நேற்று மீட்கப்பட்டார். இதன்மூலம் தேடுதல் நடவடிக்கை முற்றிலும் முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டாகான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தகவலின்படி, நேற்று மாலை 5.44 மணியளவில் ஒரு மீனவர், புலாவ் பெர்ஹாலா அருகே – சம்பவ இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் – சிறுமியின் உடலை கண்டுபிடித்தார். உடன், உடல் கடல்படை துறைக்குக் கொண்டு செல்லப்பட்டு, இரவு 8.25 மணியளவில் குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, SAR நடவடிக்கை இரவு 8.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்யப்பட்டது.
மூழ்கல் சம்பவத்தில் 29 வயதான பிப்பிங் அகமது உயிர்தப்பினார், ஆனால் அவரது இரண்டு குழந்தைகள் – அட்ஸ்ரியல் (5) மற்றும் அட்ஸ்லிந்தா (6) – மற்றும் அவரது 22 வயது உறவினர் அகமது அஸ்மின் உயிரிழந்தனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் கடலில் குதிக்க முயன்றதாகக் கருதப்படுகிறது. அவர்களை மீட்டெடுக்க முயன்ற அகமது அஸ்மின் கூட மூழ்கி உயிரிழந்தார்.
மீட்பு நடவடிக்கையில் தீயணைப்பு, கடல்படை, காவல்துறை, கடல்சார் பாதுகாப்பு அமலாக்க முகமை உள்ளிட்ட பல்வேறு முகமைகள் ஈடுபட்டன.
-யாழினி வீரா