
கோலாலம்பூர், 10 செப்டெம்பர் – மலேசியத் திரையுலகில் தனித்துவமான கதைகளால் தனக்கென ஒரு பெயரைப் பெற்ற இயக்குநர் கார்த்திக் ஷாமலன், தனது அடுத்த படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். “PKP” என்ற குறியீட்டு பெயரில் உருவாகி வரும் இந்த படைப்பு, 2026 ஆம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதிகாரப்பூர்வ தலைப்பு வரும் செப்டம்பர் 23ம் தேதி வெளியிடப்படும் என்று அவர் தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்தார்.
இந்த படத்தில், கார்த்திக் ஷாமலன் முதன்முறையாக டத்தீன் ஸ்ரீ ஷைலா நாயருடன் இணையுகிறார். அவருடைய கதை திரைக்கதை மீது கொண்ட நம்பிக்கைக்கும், தயாரிப்பில் இணைய விருப்பம் தெரிவித்ததற்கும் இயக்குநர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், திறமையான புதிய முகமாக வெரோனிகா தோமஸ் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஆடிஷன் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், தனது அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பால் படக்குழுவினரிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இப்படத்தில், மலேசிய தமிழ் திரையுலகில் ஏற்கனவே தங்கள் கலைநயம் மூலம் தனித்த அடையாளம் பெற்ற விகடகவி மகேன், யுவராஜ் கிருஷ்ணசாமி, மற்றும் சிறுமி பேபி தாஷ்ரா (நடிகர் அகோந்திரனின் மகள்) ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களின் நடிப்பு ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பில் ஷமேஷன் மணிமாறன், ஒளிப்பதிவில் தினேஷ் குமார் ஆகியோர் இணைந்திருப்பது படத்தின் கலைநிலையை மேலும் உயர்த்துவதாகும். “தி ஃபார்ம்”, “சி4சின்தா”, “அடை மழைக் காலம்”, “என் வீட்டுத் தோட்டத்தில்” போன்ற படங்களுக்குப் பிறகு, கார்த்திக் ஷாமலன் தனது அடுத்த திரையரங்கு த்ரில்லர் படைப்பை ரசிகர்களிடம் கொண்டு செல்ல உள்ளார்.
“என் ரசிகர்களின் ஆசீர்வாதம், அன்பு, மற்றும் ஆதரவு தான் என்னை தொடர்ந்து முன்னேற வைக்கிறது. இந்த படமும் உங்களுக்கான ஒரு விருந்து ஆகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் #PKP2026, மலேசிய தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
-யாழினி வீரா


