
கோத்தா பாரு, 3 பிப்ரவரி — தெற்கு பிரிகேட் பொதுப் பணிகள் படை (GOF) அதிகாரிகள் இன்று கோத்தா பாரு, தானா மேரா அருகே அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் விலை உயர்ந்த தாவரங்களை கடத்த முயன்ற முயற்சியை முறியடித்தனர்.
GOF 9ஆம் படை வீரர்கள் அதிகாலை 5 மணி அளவில் ‘Op Taring Wawasan’ கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமான ஒரு லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரிக்குள் அதிக எண்ணிக்கையில் இருந்த ப்ரோமிலியாட் (Bromeliad) எனும் விலை உயர்ந்த தாவரங்கள் இருப்பதை கண்டறிந்தனர். RM125,000 மதிப்புள்ள இவை, தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில், 25 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், இந்தத் தாவரங்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் சந்தேகிக்கப்படுள்ளார்.
சிக்கிய சந்தேகநபர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தாவரங்கள், கோத்தா பாரு வேளாண்மைத் துறை மற்றும் தாமான் பக்தி GOF கட்டுப்பாட்டு மையத்திடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக GOF தெற்கு பிரிகேட் தளபதி டத்தோ நிக் ரோஸ் ஹஜான் நிக் அப்துல் ஹாமிட் தெரிவித்தார்.
அலங்காரத் தாவரங்களை சட்டவிரோதமாக கடத்தும் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-வீரா இளங்கோவன்