
வாஷிங்டன், 20-ஜனவரி — குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது அதிபராக இன்று பதவியேற்கவுள்ளார். கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் கமலா ஹாரிஸை வீழ்த்தி வெற்றிபெற்ற டிரம்ப், இன்று பதவியேற்பு விழாவில் தனது புதிய பதவியை ஏற்கிறார்.
வாஷிங்டனில் உள்ள கேபிடல் கட்டிடத்தில் உள்ள ரோட்டுண்டா அரங்கில் இந்த விழா நடைபெறுகிறது. பாரம்பரியமாய் துணை அதிபரின் பதவியேற்பு, அதிபரின் தொடக்க உரை, மற்றும் மதிய விருந்து போன்ற நிகழ்ச்சிகள் இதில் இடம்பெறும். உலக தலைவர்கள் உள்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விழா வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் வழங்கும் தேநீர் விருந்துடன் தொடங்கும். முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் மனைவி ஜில் பைடனும் இதில் பங்கேற்பார்கள். பின்னர் இசை நிகழ்ச்சிகள் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.
அதிபர் டிரம்ப் தனது தொடக்க உரையை நிகழ்ச்சியில் ஆற்றுவார், இதில் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் பற்றி பேசுவார். அதன் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, முதல் நாள் உத்தரவுகளில் கையெழுத்திடுவார்.
இந்த விழா, கேபிட்டல் அரங்கில் அணிவகுப்பு மரியாதையுடன் நிறைவடையும். அமெரிக்க நேரப்படி நண்பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குகிறது.
– வீரா இளங்கோவன்