
கோலாலம்பூர் 19 பிப்ரவரி — எதிர்க்கட்சியினர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நலனுக்கான விவாதங்களை முன்னிலைப்படுத்தி, சச்சரவுகளைத் தூண்டும் கருத்துக்களை தவிர்க்க வேண்டும் என தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் நினைவூட்டினார்.
இது குறித்து அவர் கூறுகையில், மலேசியாவின் பேரரசர் சுல்தான் இப்ராஹிம், 15ஆவது நாடாளுமன்றத்தின் நான்காம் அமர்வின் முதல் கூட்டத்தொடரைத் திறந்தபோது வழங்கிய உரையுடன் இது இசைவாக உள்ளது. நாடாளுமன்றம் என்பது மக்களின் நலனுக்காகவும், தேச முன்னேற்றத்திற்காகவும் விவாதிக்கப்படும் உயர் களமாக இருக்க வேண்டும் என அரசர் வலியுறுத்தியிருந்தார்.
“எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அரசரின் அறிவுரையை கவனத்தில் கொண்டு, சமூக ஒற்றுமையை மேம்படுத்தும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் விவாதங்களை மேற்கொள்ள வேண்டும். பயம் அல்லது சச்சரவுகளை தூண்டும் மேடையாக நாடாளுமன்றம் இருக்கக்கூடாது,” என அவர் “இம்பேக் காம் 2025” நிகழ்வின் தொடக்க விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பெங்காலான் சபா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோக் டாக்டர் அகமட் மர்ஸுக் ஷாரி, பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் முன்மொழிந்த எதிர்பார்த்த எதிர்மறைப் பதில் குறித்து பேசியபோது, இது 1969 ஆம் ஆண்டு மே 13 கலவரத்தை மீண்டும் ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கும் எனக் கூறியிருந்தார். இந்தக் கருத்து தூண்டுதலாக உள்ளதாகக் கருதப்படுவதால், அது நாடாளுமன்றத்தின் விசேஷக் குழுவிற்கு கொண்டுசெல்லப்படும் என்றும் ஃபஹ்மி கூறினார்.
“அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, உணர்ச்சி தூண்டல்களை ஏற்படுத்தாமல், பொறுப்புடன் செயல்பட வேண்டும். இது தொடர்பாக நான் அமைச்சரவை கவனத்திற்கும் எடுத்துச் செல்லுவேன்,” என்றார்.
“இம்பேக் காம் 2025” குறித்து பேசும்போது, கார்ப்பரேட் தொடர்பு வல்லுநர்களுக்கு நவீன தகவல் தொடர்பு சவால்களைச் சமாளிக்க தேவையான திறன்கள் மற்றும் உந்துதல்களை வழங்குவதே இந்த மாநாட்டின் நோக்கம் என ஃபஹ்மி தெரிவித்தார்.
-யாழினி வீரா