Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

சுற்றுலா மையங்களின் அழகை மேம்படுத்த உடனடி நடவடிக்கை அவசியம் – MOTAC

கோலாலம்பூர், 12 நவ. – மலேசியா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (MOTAC) தலைநகரின் முக்கிய சுற்றுலா மையங்களான லிட்டில் இந்தியா, ஜாலான் அலோர் போன்ற பகுதிகளில் உள்ள வசதிகள் மற்றும் சுத்தம் ஆகியவற்றை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இது வரும் 2026 ஆம் ஆண்டுக்கான “மலேசியா வருகை 2026” சுற்றுலா ஆண்டை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் முக்கிய முன்னெடுப்பாகும்.

MOTAC-இன் துணைச் செயலாளர் தத்துக் ஷஹாருடின் அபூ சோஹோட் தெரிவித்ததாவது, பல சுற்றுலா இடங்களில் நடைபாதைகள் சேதமடைந்துள்ளன, விளக்குகள் செயலிழந்துள்ளன மற்றும் சில இடங்களில் வெளிப்புற அலங்காரம் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றன. இத்தகைய சிறிய குறைகள் கூட சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்களை ஏற்படுத்தி நாட்டின் சுற்றுலா மானத்தைக் குறைக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, உள்ளூர் ஆட்சிமன்றங்கள் (PBT) மற்றும் MOTAC இணைந்து செயல்பட்டு சாலைகள், விளக்குகள், சுவர்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற வெளிப்புற பராமரிப்புப் பணிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும். அதனைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கான ஓய்வு பகுதிகள் மற்றும் அடையாள பலகைகள் போன்ற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன.

இந்த நோக்கத்திற்காக MOTAC ஆண்டுதோறும் உள்ளூர் அதிகாரிகளுக்கு மொத்தம் ரி.ம. 80 மில்லியன் நிதி ஒதுக்கி வருகின்றது. இந்த நடவடிக்கைகள் மூலம் கோலாலம்பூர் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் அழகிய தோற்றத்துடன் வெளிப்பட்டு, 2026 சுற்றுலா ஆண்டில் மலேசியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க முடியும் என MOTAC நம்புகிறது.

-யாழினி வீரா

Scroll to Top