
ஜொகூர் பாரு, 03 நவ. – ஜாலான் ஆஸ்டின் ஹெய்ட்ஸ் 7/7 பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற சாலை விபத்தில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். சம்பவம் சனிக்கிழமை இரவு சுமார் 11.20 மணியளவில் நடந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
விபத்தில் ஈடுபட்ட கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த உணவகத்தின் முன்புறம் பாய்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு மற்றும் ஒன்பது வயதுடைய இரண்டு சிறுவர்கள் மோதி காயமடைந்தனர்.
விபத்து நிகழ்ந்தவுடன் பொதுமக்கள் உடனே குழந்தைகளை அருகிலுள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை தரப்பில் அவர்கள் ‘மஞ்சள் மண்டலம்’ பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நிலைமை தற்போது ஸ்திரமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஈடுபட்ட வாகனத்தை 32 வயதுடைய ஒருவர் ஓட்டியதாக கூறப்படுகிறது. அவர் மதுபோதையில் இருந்தாரா என்பது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. ஆரம்ப கட்ட தகவலின்படி, கார் சற்று வேகமாக வந்ததாக சில சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
போலீஸ், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் அல்லது தகவல் வழங்கக்கூடியவர்கள் உடனடியாக அருகிலுள்ள நிலையத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தச் சம்பவம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சாலையோரம் அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களில் விளையாடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
-யாழினி வீரா



